அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தினார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மூன்றாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
திறைசேரியில் மிகுதியாகும் நிதித்கேற்ப முதலீடுகளின் ஊடாக திட்டங்களை செயற்படுத்துவது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா (Sirinimal Perera)இதன்போது சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நூறு நகர அபிவிருத்தி திட்டங்கள் இதுவரை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த சிறிநிமல் பெரேரா, இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அபிவிருத்தி திட்டங்களில் பெரும்பாலானவையை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார(Udaya Nanayakkara), 2024ஆம் ஆண்டுக்குள் 60,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் காணப்படுவதாக தெரிவித்தார்.
அதற்கமைய குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 40,000 வீடுகளும், நடுத்தர வகுப்பினர் மற்றும் பிற மட்டத்தினருக்கு 20,000 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நூறு நகர திட்டத்திற்கமைய அந்த ஒவ்வொரு நகரிலும் 100 வீடுகள் என்ற அடிப்படையில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்;டு வருவதாகவும் உதய நாணயக்கார தெரிவித்தார். ‘கொழும்பில் மாத்திரமன்றி கிராமப் பகுதிகளிலும் இந்த வீடமைப்பு திட்டங்களை முன்னெடுங்கள்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நடுத்தர வகுப்பினருக்காக கொழும்பில் 3000 வீடுகளும், 2000 வீடுகள் கொழும்பின் புறநகரிலும் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டுவரும் நடை பாதை நிர்மாணத்திற்கமைய அப்பாதைகளை அண்மித்ததாக கிராமிய உற்பத்தி பொருள் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் நணவீர(Prasad Nanaweera) குறிப்பிட்டார்.
கொழும்பு பெருநகர நகர்ப்புற திட்டம் மற்றும் மூலோபாய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் நிறைவில் அமைச்சின் ஒவ்வொரு நிறுவனங்களிலும் செயற்படுத்தப்பட வேண்டிய நிதித் திட்டமிடல் மற்றும் மனிதவள முகாமைத்துவ மாதிரி பிரதமரினால் நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா(Nalaka Godahewa), நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப்(Sahan Pradeep), பிரதமரின் செயலாளர் காமினி செனரத்(Gamini Senarath), பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ச(Yoshitha Rajapaksa), நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர உள்ளிட்ட அமைச்சக நிறுவன பிரதானிகள் கலந்து கொண்டிருந்தனர்