அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அனைத்து அரிசி விலைகளும், 25 முதல் 50 ரூபாய் வரை கட்டாயம் அதிகரிக்கும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், அரசாங்கம் உடனடியாக அரிசிக்கான குறைந்தபட்ச சில்லறை விலையை வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
பொலன்னறுவையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது காணப்படும் பசளை நெருக்கடி காரணமாக பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல் சந்தைக்கு வருவது 50 வீதமாக குறைந்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம். அத்துடன் எதிர்காலத்தில் அனைத்து ரக அரிசிகளின் விலைகளும் நுகர்வோர் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம(Suraj Jayawickrama) தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் தற்போது அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து வருவதால், அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும் அரசி விலையை கட்டுப்படுத்துவதில் இருந்து அரசாங்கம் விலகி சுமார் இரண்டு வாரங்கள் கடந்துள்ளன எனவும் ஜயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.