தென்மேற்கு ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சிறிய நகரமான புச்சென் (Buchen) அருகே உள்ள வனப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக dpa செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் பைலட் மற்றும் இரண்டு பயணிகள் என 3 பேர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் சடலங்கள் மீட்கப்பட்டன, மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஹெலிகாப்டரின் உடைந்த உதிரி பாகங்கள் பல நூறு மீட்டர் பரப்பளவில் காடுகளின் நடுவில் கன்டுபிடிக்கப்பட்டது. சில பாகங்கள் மரங்களில் தொங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான இடத்தைச் சுற்றியுள்ள பகுதி பெரும்பாலும் ஜாக்கர்கள் மற்றும் மலையேறுபவர்களால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் புச்சென் நகர மையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வனப்பகுதியில் தீப்பற்றியதை கவனித்த குடியிருப்பாளர்கள் அவசர எண்ணை அழைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள், தீயணைப்பு படையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் ஏராளமான புலனாய்வாளர்கள் குவிந்தனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், ‘Robinson R44’ எனும் இந்த ஹெலிகாப்டர் 4 இருக்கைகளுடன் கூடிய ஒற்றை எஞ்சின் ஹெலிகாப்டர் என்றும், இது மத்திய பிராங்கோனியாவின் ஹெர்சோஜெனராச்சில் புறப்பட்டு கிழக்கில் இருந்து வடக்கு பேடனில் உள்ள மலைத்தொடரான ஓடன்வால்டில் பறந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.