பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் நாடுபூராகவும் நேற்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோருக்கும் அந்த பிள்ளைகளின் சார்பாக பாடசாலைகளுக்கு சமூகமளித்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்தார்.
மஹரகம பௌத்த பாடசாலை உள்ளிட்ட பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை பார்வையிட்ட அமைச்சர் அதன் பின்னர், கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,
“இன்றைய (21.10.2021) தினம் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் நாடு முழுவதும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பெற்றோர்கள் மிக ஆர்வத்துடன் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்திருந்தனர். மாணவர்களுக்கு வேண்டி அனைத்து பாடசாலைகளையும் படிப்படியாக ஆரம்பிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இந்த நாட்டின் இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. கோவிட் தொற்று பரவல் காரணமாக நீண்டகாலமாக பாடசாலைகளை நடத்துவதற்கு முடியாமல் இருந்த காலம் இன்றுடன் முடிவடைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது பெற்றோர்களுடன் நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளுக்கும் வருகை தந்ததையிட்டு கல்வி அமைச்சின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பாடசாலைக்கு சமூகமளித்து இந்த பொறுப்பை நிறைவேற்றி மாணவர்களின் இலவசக் கல்வியின் அபிலாஷைகளை அடைவதில் நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு அவர்கள் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதற்காக மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.