குழந்தைகளுக்கு அதிக அளவு மீன் இறைச்சி அல்லது மற்ற இறைச்சிகளை கொடுத்தால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். சிறுநீரகத்தின் இயக்கத்திலும் அசவுகரியம் ஏற்படக்கூடும்.
பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் காய்கறிகள், பழங்களை விட இறைச்சி வகைகளில்தான் புரதச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் சிறுவயதிலேயே குழந்தைகளை இறைச்சி உணவு வகைகளை உண்ண பழக்கலாம். எந்தெந்த வயதில் எந்தவிதமான இறைச்சி வகைகளை சாப்பிட கொடுக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும்.
6 மாதத்திற்கு பிறகு காய்கறிகள், பழங்களை கூழாகவோ, சூப்பாகவோ கொடுக்கலாம்.
9 மாதத்திற்கு பிறகு விரும்பினால் அசைவ உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்தலாம்.
குழந்தைகளை முதலில் முட்டையை சாப்பிட வைக்க வேண்டும். இதில் புரதம் மட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்கள் உள்பட ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
மீன் இறைச்சி, கோழி இறைச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டையில் புரதச்சத்து குறைவாக இருந்தாலும் அது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுவதை முட்டையை வைத்தே பரிசோதித்துக்கொள்ளலாம். முதலில் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். அதனை சாப்பிட பழகிய பிறகு வெள்ளை கருவை கொடுக்க தொடங்கலாம்.
குழந்தைகளுக்கு 1 வயது கடந்த பிறகு மீன் இறைச்சி, கோழி இறைச்சி போன்ற இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சிறிதளவு சாப்பிட கொடுக்கலாம். ஆரம்பத்தில் கோழி இறைச்சியை குழம்பாகவோ, சூப்பாகவோ சாப்பிட கொடுக்க வேண்டும். அதற்கு பிறகு இறைச்சி துண்டுகளை மிக குறைந்த அளவில் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு 5 வயது முடியும் வரை ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளை கொடுக்கக்கூடாது. அவைகளில் அதிக அளவில் புரதம் இருக்கிறது என்றாலும் அவை செரிமானத்தில் நெருக்கடியை உருவாக்கும்.