நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்ல மதவாதியும் அல்ல என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்கு, அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் சபையில் முதல்வர் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் ஒரு மதவாதி அல்ல, அத்தோடு பௌத்த மதத்துக்கு எதிரானவும் அல்ல. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல.
என்னை மதவாதி என சித்தரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியினால் யாழ். மாநகர முதல்வர் என எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே தவறான புரிதலுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்கள் என விகாராதிபதிக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
அப்பகுதி புனிதபிரதேசமாக இருக்க வேண்டும். நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் அந்த வகையில் நாம் எதிர்காலத்தில் அடையகூடிய தமிழ் தேசியத்தை ஒரு மதச் சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும்” என்றார்.



















