திருகோணமலை – மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இறால்குழி கிராமத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 600 ஏக்கர் அளவிலான விவசாயம் செய்வதற்கான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.
இறால்குழி பிரதேசத்தில் பயிர் செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கபில அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.
பல வருட காலமாக விவசாயம் செய்யப்படாமல் இப்பிரதேசம் கைவிடப்பட்டதாக காணப்பட்டது.முன்னர் இப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம் உட்பட ஏனைய திணைக்களங்கள் பிரதேசத்துக்குள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கவில்லை என்று பிரதேச விவசாயிகள் முன்னர் தெரிவித்தனர்.
எனவே இப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான அனுமதியை தந்து உதவுமாறு இப்பிரதேச விவசாயிகள் தமது கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து இப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அவர்கள் பயிர் செய்ய முடியுமான ஒவ்வொரு பிரதேசத்திலும் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கிணங்க திருகோணமலை மாவட்டத்தில் பயிர் செய்ய முடியுமான பிரதேசங்கள் இனங்காணப்பட்டு, விடுவிக்கப்பட்டு அப்பிரதேசங்களில் உற்பத்தி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினுடைய வேலைத்திட்டத்திற்கு அமைய பயிர் செய்ய முடியுமான பிரதேசங்களை இனங்கண்டு அவற்றின் பயிர் செய்யவுள்ள உள்ள தடையை நிவர்த்தி செய்து மக்களுக்கு பயிர் செய்வதற்கான அனுமதி வழங்குவதற்கான பொறிமுறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மாவட்டத்தினுடைய உற்பத்தி அதிகரித்து மேலதிகமாக உற்பத்திகளை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு விடக்கூடியதாக அமையும். இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைந்து வருமான மட்டம் உயர்வடைய காரணமாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாரக் ,பிரதேச அரசியல்வாதிகள் கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாய சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.