தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த புஸ்வாணங்களை குழந்தைகள் வாங்கி சோதனை செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த வருட தீபாவளியை புதுமையாக கொண்டாட, தீ காயம் உண்டாக்காத புஸ்வாணம் அறிமுகமாகி உள்ளது. இதற்கென பிரத்யேக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, இந்த நவீன ரக புஸ்வாணத்தை தயாரித்துள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த புஸ்வாணங்களை குழந்தைகள் வாங்கி சோதனை செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையின் போது, புது துணிகளுக்கும், இனிப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்று பட்டாசுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நடுத்தர குடும்பத்தில் கூட பட்டாசு வாங்க ஒரு குறிப்பிட்ட தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குவது உண்டு.
இந்திய தேவையில் 90 சதவீத பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகள் கடந்த சில மாதங்களாகவே இங்குள்ள பட்டாசு ஆலைகளில் மும் முரமாக தயாரிக்கப்பட்டு வந்தன. வழக்கத்தை போல எதிர்பார்த்த அளவில் பட்டாசு உற்பத்தி நடைபெறவில்லை என்றாலும், குழந்தைகளையும், இளைஞர் களையும் கவரும் வகையில் பல புதிய ரக பட்டாசுகள் இந்த ஆண்டு அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக இரவு நேரம் மட்டும் வெடிக்கப்படும் பேன்சி ரக பட்டாசுகள் பல அளவுகளில், பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன. அதே போல் குழந்தைகளை கவரும் வகையில் ஹெலிகாப்டர், கார், சிங்கம், வாத்து, டிரோன், பம்பரம், டிஜிட்டல் கிராக்கர்ஸ் போன்றவையும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான வெடிகளும் பட்டாசு சந்தைகளை அலங்கரித்துள்ளன.
இதுதொடர்பாக சிவகாசி பட்டாசு உற்பத்தி, விற்பனையாளர்கள் கூறும் போது, “பட்டாசு தொழிலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வந்த போதும், தமிழக அரசு பட்டாசு தொழிலை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.
ஒருநாள் பண்டிகைக்காக சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 8 லட்சம் பேர் வருடம் முழுக்க உழைத்து வரும் நிலையில் அவர்களின் உழைப்பு மக்களை முழுமையாக சென்று சேர வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், பட்டாசு தொழிலை நம்பி இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமையும்” என்றனர்.