ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை காரணமாக அதிருப்தியடைந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின.
எனினும், அவ்வாறான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாடு திரும்பியதும் நீதி அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிக்க தயாராகி வருவதாகவும் செய்தி வெளியாகியிருந்தன.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் தம்மிடம் ஆலோசிக்காது செயலணியை நியமித்ததில் அதிருப்தி அடைவதாகவும் அண்மையில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
நாட்டில் சட்டங்களை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் இருக்கும் போது இவ்வாறான செயலணிகளை அமைப்பதில் அர்த்தமில்லை என நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ஒரே நாடு- ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் அண்மையில் அறிவிக்கப்பட்டது,
இந்த குழுவின் உறுப்பினர்களாக 13 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 26ம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.