அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுமாறும் ஒன்றுகூடலின்போது ஐந்து நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பில் இன்று (13.11.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தவராஜா கோகுலரமணன் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தவராஜா கோகுலரமணன் தலைமையில் உயிரிழந்த ஆசிரியையின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செய்யப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஊடக சந்திப்பு நடைபெற்றது.
இதில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தவராஜா கோகுலரமணன், செயலாளர் கிருமைராஜா, மட்டக்களப்பு வலய இணைப்பாளர் திருமதி தயானந்தி தனரூபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தவராஜா கோகுலரமணன், அதிபர், ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டினை நீக்கும் வகையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக அதிபர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்த வகையில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்ததன் அடிப்படையில் அரசாங்கம் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் சுபோதினி அறிக்கையின்படி மூன்றில் ஒரு பங்கினை தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. வழமையான வரவு செலவுத்திட்டத்தினை விட 30ஆயிரம் மில்லியனை மேலதிகமாக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இருந்தபோதிலும் மீதியான இரு மடங்கினையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இதுவரையில் அதிபர்கள்,ஆசிரியர்கள் எங்களது போராட்டங்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினார்களோ அதேபோன்று எதிர்காலத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத சந்தர்ப்பத்தில் எங்களோடு கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்,
அதிபர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது உயிரை தியாகம் செய்த வருணி ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுமாறும் ஒன்றுகூடலின்போது ஐந்து நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.