சுவிஸில் பெர்ன் மாநிலத்தில் பிட்காயின் மோசடியில் சிக்கி இளைஞர் ஒருவர் பெருந்தொகையை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் பெர்ன் மாநிலத்தவரான 34 வயதான தாரியோ என்பவர் இணையமூடாக தமக்கு ஒரு வாழ்க்கைத்துணையை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் தாரா என்பவரை தாரியோ சந்திக்க, இருவரும் மிக விரைவில் நெருங்கிய நண்பர்களாக பழகிவந்துள்ளனர். மட்டுமின்றி அதே வேகத்தில் இருவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளவும் செய்தனர்.
இந்நிலையில் தாரா நிதி முதலீடுகளில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவருக்கு பிட்காயின் உள்ளிட்ட Cryptocurrency வர்த்தகத்தில் ஈடுபாடு இருப்பதுடன் அதில் முதலீடுகள் குறித்து நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார்.
இதேவேளை தாரியோவை பிட்காயினில் முதலீடு செய்து கொள்ள தாரா தூண்டியுள்ளார். அதுமட்டுமின்றி, தொடக்கத்தில் 500 பிராங்குகளுக்கு மட்டும் முதலீடு செய்தால் போதும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், பிட்காயின் முதலீட்டில் உதவிய தாராவுக்கு தாரியோவின் கணினிக்கான கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளார். நாளடைவில் தாரியோவின் பிட்காயின் முதலீடு நல்ல வருவாயை ஈட்டித்தர, மேலும் தொகையை முதலீடு செய்ய தாரா தாரியோவை வலியுறுத்தியுள்ளார்.
இதை நம்பி தாரியோ பிட்காயில் அதிக முதலீடு செய்துள்ளதுடன், அவருக்கு வருவாய் எதுவும் கிடைக்கவில்லையென கூறப்படுகிறது. இதேவேளை சேமிப்பு மொத்தத்தையும் பிட்காயின் வாங்க செலவிட்ட தாரியோ, இதற்கு மேல் தம்மிடம் முதலீடு செய்ய பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதன் பின்னரே, குறித்த நடுங்க வைக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாரா என்பவர் தாரியோவை தொடர்புகொள்ள மறுத்ததுடன், அதுவரை முதலீடு தொடர்பில் தாம் கண்காணித்து வந்த இணைய பக்கமும் திடீரென்று மாயமாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாரியோ, இணையத்தில் தேடியதில், தாரா என்பவரால் தாம் ஏமாற்றப்பட்டதும், தமது சேமிப்பு மொத்தமும் திருடிக்கொண்டது ஒரு நிறுவனம் எனவும் தாரியோ புரிந்து கொண்டார். தற்போது இந்த விவகாரத்தை பெர்ன் மாநில பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.