கோவிட் வைரஸ்சிற்கு எதிரான இரண்டு கட்ட தடுப்பூசி மருந்தையும் பெற்று மூன்று மாதங்கள் கடந்தவர்கள், மூன்றாம் கட்ட தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) கூறியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றப்படும் போது மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும்,அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்கள், கள உத்தியோகத்தர்கள், ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய வழிகள் ஊடாக தடுப்பூசி ஏற்றப்படும் இடம் மற்றும் நேரம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதேவேளை,இலங்கையில் நேற்று கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,057 ஆக உயர்வடைந்துள்ளதாக திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.