இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் இடை நிறுத்தப்பட்டிருந்த பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தரம் 6 முதல் 9 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு முன்னர் முதலாம் வகுப்பு தொடக்கம் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும், 10ஆம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரையான மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய இன்றைய தினம் முதல் பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 தொற்று பரவல் நிலைமை காரணமாக கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள், சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக 200 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு தரங்களும், இரண்டாம் கட்டத்தின் கீழ் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவு தரங்களும், மூன்றாம் கட்டத்தின் கீழ் அனைத்து பாடசாலைகளின் சாதாரண மற்றும் உயர்தர தரங்களும் ஆரம்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நான்காம் கட்டத்தின் கீழ், அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 6, 7, 8, 9 மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (22) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை,புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிப்பில் சில மாற்றங்களை கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கோவிட் வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தடங்கல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கு பொறுப்பான மேலதிக செயலர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்திருந்தார்.
கோவிட் பரவல் விளைவாக, கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் அசேல குணவர்தன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர்கள் கடந்த சில தினங்களாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஜனவரி மாதத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.