அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரச அதிகாரிகளைப் புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகளின் தொழிற்சங்க ஒன்றியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளா் பிரதீப் பஸ்நாயக்க,
அரச அதிகாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் (Gotabaya Rajapaksa) முன்வைக்கப்பட்ட எழுத்து மூல கோரிக்கைக்கு இதுவரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
அதன் காரணமாக எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னா் எங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் 29 ஆம் திகதி நாடு தழுவி ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய, கிராம அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள், முகாமையாளர் சேவை அதிகாரிகள், விவசாய பரிசோதனை உதவி அதிகாரிகள் மற்றும் காரியாலய சேவை அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.