பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிக்கு தற்போது கனமழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் கனமழை, பெருவெள்ளம், மண்சரிவு என கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிக்கு வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தயார் நிலையில் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், Haida Gwaii, Prince Rupert, Kitimat மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் Prince Rupert பகுதியில் 100ல் இருந்து 150 மி.மீற்றர் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பெருவெள்ளம் நிலச்சரிவு அபாயங்களும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயலின் போது நிலச்சரிவுகள் மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக மாகாணத்தின் கீழ்ப்பகுதியை உள்பகுதியுடன் இணைக்கும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன.
பாதிக்கப்பட்ட சில சாலைகள் மீண்டும் திறக்கப்படவில்லை, மீண்டும் திறக்கப்பட மேலும் பல மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் கூடுதல் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளது எனவும், தேவைக்கேற்ப நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடக்கு உள்பகுதி முழுவதும் பனிப்பொழிவு மற்றும் புயல் எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது, சில பகுதிகளில் 20 முதல் 30 செ.மீ வரை பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.