இந்தியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஒரு அணியுடன் ஒப்பந்தம் செய்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
குறித்த சிறுவனை ராஜஸ்தான் றோயல்ஸ் அணியே (RR) ஏலத்தில் எடுத்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நேற்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது.
ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிறுவனை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்லி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின.
இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது.
வைபவ் சூர்யாவன்ஷி
இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது 12ஆவது வயதில் விளையாடிய இடதுகை துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யாவன்ஷி, மிக அண்மையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்தார்.
சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் சதம் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். அவர் 62 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரன் அவுட் ஆனார்.
பிஹாரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ரந்திர் வர்மா கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் முச்சதம் குவித்து அசத்தியிருந்தார். அத்துடன், வைபவ் சூர்யாவன்ஷி, இடதுகை சுழல்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.