Courtesy: Dinamani
B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கரோனா குறித்து விஞ்ஞானிகள் உலகளவில் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
குறிப்பாக, புதிய வகை கரோனாவின் புரத கூர்முனைகளில் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்படுவது தடுப்பூசிக்கு எதிராக போராடும் அதன் தன்மையை அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பரவல் தன்மை அதிகரித்து தீவிரமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புதிய வகை கரோனாவில் மொத்தமாக 50 மாற்றங்கள் தென்பட்டுள்ளது.
அதில், 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் புரத கூர்முனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது செலுத்தப்பட்டுவரும் கரோனா தடுப்பூசியின் இலக்காக இந்த புரத கூர்முனைகளே உள்ளன. உடலில் உள்ள அணுக்களை கடந்து உள் புகுவதற்கு இந்த புரத கூர்முனைகளையே வைரஸ் பயன்படுத்துகிறது.
முன்பிருந்த கரோனாவை விட இது அதிக தீவிர பரவல் தன்மை கொண்டது, அதிக அபாயம் வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்டா வகையை ஒப்பிடுகையில் புதிய வகை கரோனாவின் உணர்திறன்மிக்க பகுதிகளில் 10 மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா வகை கரோனாவின் புரத கூர்முனைகளில் கண்டறியப்பட்ட K417N மாற்றமே, டெல்டா வகை கரோனாவிலிருந்து அதை வேறுப்படுத்துகிறது.
நோய் எதிர்பபு சக்தியிலிருந்து தப்பிக்க இந்த மாறுதல் கரோனாவுக்கு உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், புதிய வகை கரோனாவில் இது மாறுதல் அடைந்திருக்கிறதா என்பது குறித்து தெரியவில்லை.
புதிய வகை கரோனா யாரிடமிருந்து பரவியது என்பது குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரிவிவருகின்றன. அதேபோல், நோயாளி ஒருவரிடமிருந்து இது பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து லண்டனை மையமாக கொண்டு இயங்கும் யுசிஎல் மரபியல் நிறுவனத்தின் இயக்குநர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ் கூறுகையில், “இது ஒரு நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரின் நாள்பட்ட நோய்த்தொற்றிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம், அவர் சிகிச்சை அளிக்கப்படாத எய்ட்ஸ் நோயாளியாக இருக்கலாம்” என்றார்.
தென்னாப்பிரிக்காவில்தான், இந்த புதிய வகை கரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர், போட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அது பரவியுள்ளது.
அங்கு, இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் இந்த புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கரோனாவால் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் பாதிக்கப்பட்டிருப்பதை கிருமியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதை காட்டிலும், போட்ஸ்வானாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹாங்காங்குக்கு சென்ற இரண்டு பயணிகளுக்கு அவ்வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த அப்பயணியிடம் கண்டறிப்பட்ட புதிய வகை கரோனாவுக்கு B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ளது. அந்த பயணி தங்கியிருந்த விடுதி அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் புதிய வகை கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதை ஹாங்காங் அரசு வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. இதையடுத்து இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கடும் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.