கொழும்பு உட்பட அதன் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த இறப்பர், கருவாய், முருகை மரங்களின் விறகுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்டு விறகின் விலையானது 30 முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அனுராதபுரம், புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு வர்த்தக ரீதியில் சுமை ஊர்திகளில் விறகுகள் கொண்டு வரப்படுவது அதிகரித்துள்ளது.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் மண் எண்ணெய்க்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக பிரதான நகரங்களில் மாத்திரமல்லாது, சன நெருக்கடிமிக்க பிரதேசங்களிலும் விறகுகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக விறகுகளுக்காக மரங்களை வெட்டுவதும் அதிகரித்துள்ளதாக சுற்றுச் சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனடிப்படையில் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி விறகுகளாக நகரங்களுக்கு ஏற்றிச் செல்லப்படுவதும் அதிகரித்துள்ளது என அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
இலங்கையில் அண்மையில் சில இடங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்தலில் உயிர் சேதங்கள் ஏற்பட்டதுடன் சிலர் காயமடைந்தனர்.அத்துடன் வீடுகள் உட்பட உடமைகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.