‘ஒமைக்ரான்’ கண்டறியப்பட்டுள்ள எட்டு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாடுகளில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்றழைக்கப்படும் வீரியம் மிக்க கொரோனா மாறுபாடு தற்போது பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்து விடாமல் தடுக்கும் விதமாக வெள்ளை மாளிகை புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (CDC) மற்றும் வெளியுறவுத்துறை சனிக்கிழமையன்று எட்டு தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு எதிராக அறிவுறுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா, மொசாம்பிக், மலாவி, லெசோதோ, ஈஸ்வதினி மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு CDC தனது பயணப் பரிந்துரையை நான்காம் நிலைக்கு அதாவது மிக ஆபத்து என உயர்த்தியது.
அதேசமயம், வெளியுறவுத்துறை, குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.