இலங்கையில் தற்போதுள்ள வெளிநாட்டு செலாவணியின் அளவு தொடர்பாக சபைக்கு அறிவிக்கவேண்டும். வெளிநாட்டு செலாவணி இல்லாமல்போனால் நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படும். மார்ச் மாதமாகும்போது உணவு தட்டுப்பாட்டுடன் வலுசக்தி தட்டுப்பாடும் ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Wickramasinghe) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (29) திங்கட்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆகும்போது வெளிநாட்டு செலாவணிகளின் தற்போதைய நிலை மற்றும் நாட்டில் இருக்கும் நிதி டொலர் ஊடாகவும் கையில் இருக்கும் தங்கங்களையும் டொலர் ஊடாக சபைக்கு அறிவிக்கவேண்டும்.
இதுதொடர்பான அறிக்கை மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பி இருக்கவேண்டும். எம்மிடமிருக்கும் வெளிநாட்டு செலாவணியின் அளவை அடிப்படையாகக்கொண்டே வலுசக்தி தீர்மானிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு செலாவணி குறைவடைந்தால், நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படலாம். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அதற்கு நாங்கள் எவ்வாறு முகம்கொடுப்பது என கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக வெளிநாட்டு செலாவணி தொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கவேண்டும்.
அத்துடன் எனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் எம்மிடமிருக்கும் வெளிநாட்டு செலாவணி அளவு 1.5 டொலர் பில்லியனாகும். அதில் 300 தங்கம். அப்படியானால் எமது கையில் இருப்பது 1.2பில்லியனாகும். இந்த தகவல்களை வெள்ளிக்கிழமைக்கு மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்புகின்றது.
அவ்வாறு அனுப்பிய அறிக்கையையே நாங்கள் சபைக்கு வழங்குமாறு கேட்கின்றாேம். இவ்வாறான அறிக்கை இல்லை என்றால் மத்திய வங்கி எமக்கு பொய் சொல்கின்றது என்றே தெரிவிக்கவேண்டும். அத்துடன் மழைவீழ்ச்சி தற்போது அதிகரித்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பிள்ளன.
அதில் ஒரு பகுதி விவசாயத்தேவைக்கு நீர் விநியோகிக்க வேண்டும். அதன் பிறகு மீதமாகும் நீர் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் களஞ்சியப்படுத்தி இருக்கும் மசகு எண்ணெய்யை ஒப்பிட்டு பார்க்கையில், மார்ச் மாதமாகும்போது நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும். உணவு தட்டுப்பாட்டுடன் வலுசக்தி தட்டுப்பாடும் ஏற்படும் என்றார்.