எமது கடல் எல்லைகளில் மட்டுமல்ல யாழ் தீவகத்திலும் எண்ணெய் வளம் உள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது, வெகு விரைவில் இந்த ஆய்வுகள் வெளிவரும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Uthaya Gammanbila) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின்போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மழைக்காலநிலை மாறினாலும் கூட அடுத்த 40 நாட்களுக்கு தேவையான உராய்வு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு நாம் இடமளிக்கவில்லை. ஆகவே எக்காரணம் கொண்டு நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படாது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலைமைகளை கூறினார்.
சாதாரண நிலைமைகளுக்கு அமைய அவர் கூறுவது நடக்கக்கூடிய விடயமே. எனினும் கடந்த 15 ஆம் திகதி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிய வேளையிலும் 79 ஆயிரம் மெற்றிக் தொன் உராய்வு எண்ணெய் எமது எண்ணெய் குதங்களில் இருந்தது.
கடந்த கால மழைக்காலநிலை காரணமாக நீர் மின் பாவனை 50 தொடக்கம் 55 வீதத்தால் அதிகரித்த காரணத்தினால் இந்த காலகட்டத்தில் உராய்வு எண்ணெய்க்கான கேள்வி வரவில்லை.
ஆகவே இப்போதும் எமது எண்ணெய்க் குதங்களில் முழுமையாக உராய்வு எண்ணெய் சேமிக்கப்பட்டுள்ளது. மழைக்காலநிலை நின்றாலும் கூட அடுத்த 40 நாட்களுக்கு தேவையான உராய்வு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் வெகு விரைவில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
ஆகவே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் வெட்டு ஏற்பட எந்த வாய்ப்புகளும் இல்லை, அதேபோல் டொலர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இறக்குமதியில் சுகாதார சேவைக்கும், எரிபொருள் இறக்குமதிக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
எனவே எக்காரணம் கொண்டு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. வெகு விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு நாம் இடமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.