அனைத்து பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, 2021ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவடைவது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கடந்த 26 ஆம் திகதி விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண, வலய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கும் ,பிரிவேனாக்களுகும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறும். க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தற்போதைய தரங்களில் உரிய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு போதிய கால அவகாசம் உள்ளதால், அந்தப் பாடத்திட்டங்களை முழுமையாக உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 கிறிஸ்தமஸ் பண்டிகைக்காக அனைத்து பாடசாலைகளும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அன்று விடுமுறை வழங்கப்படும். அந்த விடுமுறையின் பின்னர் டிசம்பர் மாதம் 27ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2022 பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும். எவ்வாறாயினும், இந்த பரீட்சையை நடத்துவதில் ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்கு விடுமுறை வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவடைந்ததன் பின்னர் மார்ச் மாதம் 07 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். சித்திரை புத்தாண்டுக்காக ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.
முஸ்லிம்களுக்கான நோன்பு காலங்களில் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
2021 க.பொ.த க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கல்வியாண்டு 2022 ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
எவ்வாறாயினும், அந்த மாணவர்களுக்கு கருத்தரங்குகள் அல்லது வேறு மாற்று வழிகள் மூலம் பாடத்தை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அத்துடன், 2022ம் ஆண்டுக்கான பாடசாலை கால அட்டவணை விரைவில் வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.