தன் மனைவி கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக போலி சான்றிதழ் ஒன்றை அவரது அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார் ஜேர்மானியர் ஒருவர்.
Devid R என்னும் அந்த ஜேர்மானியர், தன் மனைவி Linda கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக போலி சான்றிதழ் ஒன்றை அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்க, அது போலி சான்றிதழ் என்பதை அவருக்கு பணி வழங்குபவர் கண்டுபிடித்துவிட்டிருக்கிறார்.
ஆகவே, தாங்கள் கைது செய்யப்படுவோம், பிள்ளைகளைப் பிரிய நேரிடும் என்ற பயத்தில், குடும்பமாக உயிரை மாய்த்துக்கொள்வதென கணவனும் மனைவியும் முடிவு செய்திருக்கிறார்கள்.
கடந்த சனிக்கிழமை, அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அளித்த தகவலின் பேரில் பொலிசார் Koenigs Wusterhausen என்ற நகரத்திலுள்ள அந்த தம்பதியரின் வீட்டுக்குச் செல்ல, அங்கு வரிசையாக ஐந்து உயிரற்ற உடல்கள் கிடப்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள்.
Devid, தன் மனைவி Lindaவையும், மகள்கள் Leni, Janni மற்றும் Rubiயையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
Devid எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்று பொலிசாருக்கு கிடைத்துள்ள நிலையில், தான் தன் மனைவியின் கொரோனா சான்றிதழில் மோசடி செய்ததாகவும், அதை அவரது அலுவலகம் கண்டுபிடித்துவிட்டதால், தாங்கள் கைது செய்யப்படுவோம் என்றும், அதனால் பிள்ளைகளை பிரிய நேரிடும் என்றும் அச்சம் ஏற்பட்டதால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி கொரோனா சான்றிதழை சமர்ப்பிப்பது கிரிமினல் குற்றம் என இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஜேர்மனி அரசு அறிவித்தது.
அந்தக் குற்றத்திற்கு அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.