இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat) , அவரது பாரியார் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் உள்ளிட்ட பதினான்கு பேர் பயணித்த ஹெலிகொப்டர் தமிழ் நாட்டில் விபத்துக்குள்ளாகியது.
இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும், மக்களினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய ஒரு நண்பர் என்ற வகையில் ஜெனரல் பிபின் ராவத் அவர்களது நினைவு மிக நீண்டகாலமாக நிலைத்திருக்கும் என்றும் இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.