தமிழகத்தின் குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தின் போது முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி, பிற இராணுவ அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் பயணம் செய்திருந்தனர்.
இவர்களில் விமான ஓட்டுனர் தவிர்த்து, மற்ற 13 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஹெலிகொப்டரின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாவதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்னர் பதிவான காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தில் பிபின் ராவத், மதுலிகா ராவத், பிரிகேடியர் லிட்டர், ஹர்ஜிந்தர் சிங், பிரித்வி சிங் சவுஹான், குல்தீப் சிங், ஜிதேந்தர் குமார், ஹவில்தார் சத்பால், சாய் தேஜா, விவேக்குமார், குருசேவக் சிங், ராணா பிரதாப் தாஸ், பிரதீப் அரக்கல் ஆகியோர் பயணித்திருந்தனர். அனைவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன் பயணித்த மற்றொரு நபரான ஹெலிகொப்டர் கேப்டன் வருண் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தீக்காயத்துடன் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
பிரிகேடியர் லிட்டர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவர், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தின், பாதுகாப்பு ஆலோசகர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த லெஃப்டினென்ட் கர்னல் (Lt Col) ஹர்ஜிந்தர் சிங், கூர்க்கா ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்டின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். சியாச்சென் பகுதியில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
பிரித்வி சிங் சவுஹான் மற்றும் ஸ்குட்ரான் லீடர் குல்தீப்பும் இருவரும் சூலூர் விமானப் படை தளத்தில் ஹெலிகாப்டர் பிரிவுக்கு தலைமை அதிகாரியான விங் கமாண்டர்.
கமாண்டோ வீரர் ஜிதேந்தர் குமார், மத்தியப்பிரதேச மாநிலம் செகோர் பகுதியை சேர்ந்தவர். இவர் உயர் சிறப்பு பாதுகாப்புப் படைப்பிரிவிலும் பணியாற்றினார்.
ஹவில்தார் சத்பால், சாய் தேஜா மற்றும் விவேக் குமார், பிபின் ராவத்தின் முதன்மைப் பணியாளர் அதிகாரியாக இருந்துள்ளனர். இவர்களில் ஹவில்தார் சத்பால் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள தக்தா பகுதியை சேர்ந்தவர். சாய் தேஜா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். விவேக் குமார், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்.
பஞ்சாபைச் சேர்ந்த கமாண்டோ வீரர் குருசேவக் சிங், விமானப் படைப்பிரிவில் சேவையை தொடங்கியவர். பின்னர், சிறப்பு பாதுகாப்புப் படைப்பிரிவிலும் பணியாற்றியவர்.
ஜூனியர் வாரண்ட் அதிகாரி ராணா பிரதாப் தாஸ், ஒடிஷா மாநிலம் தால்செர் பகுதியை சேர்ந்தவர். இவர் 2009-இல் பாதுகாப்புப்படையில் இணைந்தார்.
மற்றொரு ஜூனியர் வாரண்ட் அதிகாரியான பிரதீப் அரக்கல் கேரளாவை சேர்ந்தவர். இவர் சூலூர் விமானப் படைத் தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.