எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இலங்கைக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கு புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய நாட்டிற்கு வரும் பயணிகள் தமது கையடக்க தொலைபேசியில் சுகாதார நிலையைக் குறிப்பிடும் QR குறியீட்டை உள்ளிடுவது அல்லது அதன் பிரதியை எடுத்து வருவதை கட்டாயமாக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றுலா அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலையத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைப்பதற்காக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். எனினும், ஒரு பயணியால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அந்த பயணி சுகாதார நிலைமை தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்ப்பித்த பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம் என அவர் கூறியுள்ளார்.
இலங்கை வரும் இலங்கையர் அல்லது வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் தங்களின் சுகாதார நிலையை அறிவிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் படிவத்தை நிரப்பவில்லை என்றால், ஒன்லைன் ஊடாக QR குறியீட்டை பயன்படுத்தி வருவதற்குமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நடைமுறையும் இல்லாமல் பயணிகள் நாட்டிற்கு வந்தாலும் அவர்களை நிராகரித்து திருப்பி அனுப்ப மாட்டோம். சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் நாட்டிற்கு அனுமதிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.