இலங்கையில் மாத்திரமல்லாது அமெரிக்காவின் திறைசேரியிலும் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அவர்களும் தற்போது பணத்தை அச்சிட்டு வருவதாக அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டியூ. குணசேகர (Dew Gunasekera) தெரிவித்துள்ளார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் நாம் எதிர்நோக்கும் ஆழமான, மிகப் பெரிய தீர்மானகரமான நெருக்கடியை தற்போது எதிர்நோக்கி வருகின்றோம். இந்த நெருக்கடியின் மூன்று பக்கங்கள் உள்ளன.
ஒன்று உலக நிதி நெருக்கடி. பொருளாதார நெருக்கடி. அவற்றின் தாக்கங்கள் எமக்கும் உள்ளன. இதனால், எமது கட்டுப்பாட்டை மீறி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். சர்வதேச நிலைமைகளே இதற்கு காரணம்.
இரண்டாவது நெருக்கடி கோவிட் 19 உலக தொற்று நோய். இது முழு உலகத்தையும் பாதித்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக உலக பொருளாதாரத்தை மூட நேர்ந்தது. மூடிய பின்னர் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. உற்பத்தி குறையும் போது விலைகள் அதிகரிக்கும்.
அதேபோல் முழு உலகிலும் தற்போது நிதி நெருக்கடியும் காணப்படுகிறது. எமது நாட்டில் போன்று அமெரிக்காவின் திறைசேரியிலும் டொலர் இல்லை. அவர்கள் டொரை அச்சிடுகின்றனர்.
அமெரிக்க காங்கிரஸில் நேற்றைய தினமும் கடன் பெறும் எல்லை அதிகரிக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டது. இவற்றை எமது பொருளாதார நிபுணர்களோ, நாடாளுமன்றமோ நாட்டுக்கு தெரியப்படுத்தவில்லை.
அமெரிக்க அதிகளவில் சீனாவிடம் இருந்தே கடனை பெற்றுள்ளது. பிணைமுறிகளில் இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளன. சீனாவே கடன் வழங்க முன்வருகிறது. சீனாவிடமே உலகில் அதிகளவான நிதி கையிருப்பில் உள்ளது.
சீனாவிடம் 4.5 ட்ரில்லியன் டொலர் கையிருப்பில் இருக்கின்றது. சீனா உலகில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 5வது இடத்தில் இருக்கின்றது. உலகில் அமெரிக்க டொலர்கள் சீனாவிலேயே அதிகளவில் உள்ளன.
இந்த உண்மை அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது. எதிர்க்கட்சியினருக்கும் தெரியாது. தெரிந்த பொருளாதார நிபுணர்களும் இவற்றை கூறுவதில்லை எனவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.