நாட்டில் நாளாந்தம் மண்ணெண்ணெயின் தேவை சுமார் 100 மெட்ரிக் தொன்னால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சாதாரண நாட்களில் மண்ணெண்ணெயின் தேவை 500 மெட்ரிக் தொன்னாக உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும், மண்ணெண்ணெயினை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிவாயு அடுப்பு வெடிப்பதால், பலர் விறகு, மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு மாறியுள்ளனர். மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு அதிகளவில் மக்கள் மத்தியில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அதிகளவு மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பினை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக 2200 ரூபா முதல் 3500 ரூபா வரை விற்கப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு தற்போது 7000 ரூபா முதல் 9000 ரூபா வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,நாட்டின் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையேற்பட்டுள்ளமையினால் மக்கள் தொடர்ச்சியாக பெரும் நெருக்கடியினை சந்தித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.