வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் பொதிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் நான்கு பேரை வவுனியா பொலிஸார் கைது இன்று செய்துள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்தனர்.
வவுனியா பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞர்களைச் சோதனை செய்த போது ஹெரோயின் மற்றும் கஞ்சா என்பவற்றைச் சிறு சிறு பொதிகளாக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 800 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா குறாறத்தடுப்பு பிரிவுபொலிசார் தெரிவித்துள்ளதோடு, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தாண்டிக்குளம், புதுக்குளம், மரக்காரம்பளை மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 24, 25, 22, 29 வயதுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்