கனடாவில் திங்களன்று மட்டும் 10,450 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாகாணங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் திங்கட்கிழமை ஒரே நாளில் 10,450 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 13 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் மாகாணங்களில் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
நாட்டிலேயே கடுமையான கட்டுப்பாடுகளை கியூபெக் மாகாணம் அமுலுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை கியூபெக் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், மதியத்திற்கு மேல் 5 மணியுடன் இனி திரையரங்கங்கள், பொழுதுபோக்கு இடங்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்தும் மூடப்பட உள்ளது.
மாகாணத்தின் சுகாதார நிலை சிக்கலான நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் துபே, புதிய கட்டுப்பாடுகள் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜனவரி 10ம் திகதி வரையில் பாடசாலைகளை மொத்தமாக மூடியுள்ள கியூபெக் நிர்வாகம், உணவகங்கள் குறைவான வாடிக்கையாளர்களுடன் இரவு 10 மணி வரையில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் மட்டும் திங்கட்கிழமை ஒரேநாளில் புதிதாக 4,571 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில் 18 வயதுக்குக்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அனுமதி அளித்துள்ள நிலையில், திங்கட்கிழமை ஒரே நாளில் 3,784 பேர்களுக்கு புதிதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் திங்கட்கிழமை ஒரே நாளில் 807 பேர்களுக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.