அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அரசு வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (23) ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசு வாக்குறுதி அளித்த முறைமைக்கு அமைவாக எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அதிபர் – ஆசிரியர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை சம்பளத்துடன் இணைக்காவிட்டால் பாரிய தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசு அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 3 கோடி ரூபாவை ஒதுக்கியது.
எனினும், அதற்கான சுற்றுநிருபம் இதுவரை வெளியிடப்படவில்லை. இவ்விடயத்தில் எமக்குப் பாரிய சந்தேகம் உள்ளது.
இது தொடர்பில், கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வந்தாலும் இதுவரை ஒரு தீர்க்கமானம் வழங்கப்படவில்லை.
அமைச்சரவை உபகுழுவால் அனுமதிக்கப்பட்டு அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலுவைக் கொடுப்பனவையே நாம் கோருகின்றோம்.
நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றது. மத்திய மாகாணத்தில் மட்டும் 2 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.