அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்ததுடன், துப்பாக்கிச்சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில்,நள்ளிரவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சாஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளதுடன்,விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ’ துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும், அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீதும் அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டினை நடத்திவிட்டு சந்தேகநபர் ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகளுடன் எத்திமலே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.