இலங்கை மக்களிடையே போசாக்கின்மை பிரச்சினைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் கொள்வனவு இயலுமை நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதனால் போசாக்கான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என்று வயம்பல பல்கலைக்கழகத்தின் போசாக்கு தொடர்பான பேராசிரியர் ரேணுக சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமைகளினால் அநேகர், தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். பொருட்களின் விலை அதிகரிப்பினால் சிலர் ஒரு வேளை உணவை மட்டுமே உட்கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பெருந்தொற்று நிலைமைகளில் அனைவரும் போசாக்கான உணவுகளை உட்கொண்டு தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற போதிலும், துரதிஸ்டவசமாக பொருளாதார நிலைமைகளினால் உணவு உட்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதற்கு சமனிலையான உணவு பழக்கம் மிகவும் இன்றியமையாததாகும். தடுப்பூசிகளை உரிய முறையில் போட்டுக் கொண்டாலும் சமனிலையாக உணவு உட்கொள்ளாவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாது.
வளர்ந்த ஒருவர் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 400 கிராம் எடையுடைய (சமைப்பதற்கு முன்னர்) மரக்கறி, பழங்களை சாப்பிட வேண்டுமென அவர் பரிந்துரைத்துள்ளார். நாள் ஒன்றுக்கு இரண்டு பழங்களையேனும் ஒருவர் உட்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.