வருட இறுதியில் விடுமுறையை கழிப்பதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்ப்டமையும் இவர்கள் வெளிநாடு செல்ல வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
நத்தார் மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றுக்காக வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வெளிநாடு செல்வதாக கூறப்படுகிறது.
நாட்டில் கடுமையாக டொலர் பற்றாக்குறை மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சூழலில் இவர்கள் வெளிநாடுகளுக்கு விடுறையை கழிக்க சென்றுள்ளமை முக்கிய அம்சமாகும்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர், வெளிநாடுகளில் கல்வி கற்றும் தமது பிள்ளைகள், அங்கு வசித்து வரும் உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே செல்வதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.
தற்போது வெளிநாடு சென்றுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக மேலும் சிலர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தெரியவருகிறது.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் வருட இறுதியை கழிப்பதற்காக நுவரெலியா செல்ல தயாராகி வருகின்றனர். இவர்கள் சுதந்திரமாக ஓய்வெடுப்பதற்காக நுவரெலியாவில் உள்ள ஜெனரல் ஹவுஸ் விடுதியை ஒதுக்கிக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.