இலங்கை முழுவதும் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
கடைசியாக மலேரியா மரணம் 2007ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இலங்கையில் கடைசியாக மலேரியா நோயாளர் ஒருவர் 2012 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டார். 2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் 25 மலேரியா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 24 பேர் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள் எனவும் வைத்தியர் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயாளி அடையாளம் காணப்பட்டார். இவர் கடந்த 7ஆம் திகதி ஆபிரிக்க நாடொன்றிலிருந்து இலங்கை வந்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் மலேரியா பரவினால் அது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் மலேரியா ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.