இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி பயணிப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை நாட வேண்டியிருக்கும் என சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஊடகத்திற்கு இன்று காலை கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதில் தவறில்லை.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி மற்றும் கையிருப்பு குறைந்து வருவதால் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திறைசேரியின் செயலாளர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.
குறைந்த வட்டி விகிதத்தில் நிதி உதவி பெறுவதற்கு நட்பு நாடுகளின் உதவியையும் நாடு நாட வேண்டும்.
இதேவேளை எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று வல்லுநர்கள் ஏற்கனவே கணித்திருப்பதால், கடந்தகால அரசியல் மற்றும் சமூக முன்னேற்றங்களின் அடிப்படையில் உடனடி தீர்வுகளைத் தேட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறான கருத்தை வெளியிட்டாலும், பல்வேறு நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டி ஏற்படும் என்பதால், சர்வதேச நாணய நிதியத்திடம் ஒருபோதும் கடன் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என இலங்தை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முன்னர் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















