இலங்கையில் அடுத்து வரும் வாரங்களில் ஒமிக்ரோன் முன்னணி கோவிட் மாறுபாடாக மாறக்கூடும் என சுகாதார அமைச்சின் கோவிட் தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் நடத்தப்படும் என்டிஜென் பரிசோதனையில் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களின் உயிரியல் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் மாறுபாடுகளை கண்டறிய மரபணு சோதனை பயன்படுத்தப்படுகிறதென அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் ஒமிக்ரோன் மாறுபாடு டெல்டா வைரஸை விட மூன்று மடங்கு வேகமாகப் பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களில் இதுவரை 48 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட 48 பேரில் ஒருவர் மாத்திரம் அனுராதபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளார், மீதமுள்ள 47 பேர் கொழும்பு, கம்பஹா மற்றும் பதுளை மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும், அவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அவர்கள் தற்போது தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஒமிக்ரோன் பரவி வருவதால், கோவிட் நோய்த்தடுப்பு தடுப்பூசியின் மூன்றாவது தடுப்பூசி எடுத்துக்கொள்வதும் முக்கியம். இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்களின் செயற்பாடு காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கோவிட் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மக்கள் வணிக வளாகங்களுக்குச் செல்வதாலும், உல்லாசப் பயணங்களுக்குச் செல்வதாலும் கோவிட் வேகமாகப் பரவக்கூடும் என விசேட மருத்துவர் வலியுறுத்தினார்.