ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe ), சீன ஜனாதிபதி ஸீ ஜின்பின்கின் (Xi Jinping ) நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி சட்டவிரோதமான முறையில் தரகு பணத்திற்காக செய்து கொள்ளப்பட்ட அனைத்து உடன்டிக்கைகளையும் ரத்து செய்ய நேரிடும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ளுமாறு சீன ஜனாதிபதிக்கு, விஜயதாச ராஜபக்ச தனது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் அதிகார ஆக்கிரமிப்பு கொள்கைகளினால் இலங்கை மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏழு பக்கங்களைக் கொண்ட நீண்ட கடிதமொன்றில் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களினதும், சீன ஆட்சியாளர்களினதும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தரகுப் பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தற்போதைய ஆட்சியாளர்கள் சீனாவினால் முன்வைக்கப்படும் நாட்டுக்கு தீங்கிழைக்கும் திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தரகுப் பணம் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பங்களையும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நிதி நிறுவனங்களிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ள கூடிய சாத்தியம் இருந்தும், அரசாங்கம் சீனாவிடமிருந்து கூடுதல் வட்டிக்கு கடன் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் அதிகார மோகத்திற்கு இலங்கை வாழ் அப்பாவி மக்கள் பலிகடாக்களாகியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் ஏனைய பலம்பொருந்திய நாடுகளுடன் மோதி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில், இலங்கையுடனான நட்புறவை சீனா பிழையாக பயன்படுத்திக் கொள்வதாகவும் இதனால் அப்பாவி இலங்கை மக்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனாவின் நடவடிக்கைகளினால் நாடு வங்குரோத்து அடைந்துள்ளதுடன், நீண்ட காலமாக உதவிகளை வழங்கி வந்த இந்தியா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்ட நாடுகளுடனான நட்புறவிற்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டத்தில் உலகின் ஏனைய நாடுகள் முதலீடு செய்ய தயங்குவதாகத் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளுக்கு சினோ பார்ம் கோவிட் தடுப்பூசி 10 டொலருக்கும் குறைவாக விற்பனை செய்யும் சீனா, இலங்கைக்கு 15 டொலருக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட கால வரலாற்று நட்புறவு கொண்ட சீன இலங்கை உறவுகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சீன ஜனாதிபதியும் தற்போதைய ஆட்சியாளர்களும் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர், மாநாயக்க தேரர்கள், கர்தினால், வெளிவிவகார அமைச்சர், சீனத்தூதுவர் மற்றும் ஏனைய நாடுகளின் ராஜதந்திரிகள் ஆகியோருக்கு இந்த கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.