தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபட்டின் ஒமைக்ரான் தொற்று , உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரானில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில், பூஸ்டர் தடுப்பூசி, ஒமைக்ரானுக்கு எதிராக எவ்விதம் செயல்படும் என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டதுடன் அவற்றின் முடிவுகளை இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பு தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில், 2 டோஸ் போட்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரானுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. 2-வது டோஸ் தடுப்பூசி போட்ட 6 மாதங்களுக்கு பிறகு அதன் பாதுகாப்பு திறன் 52 சதவீதமாக குறைகிறது.
ஆனால், பூஸ்டர் தடுப்பூசி போட்டவுடன் அதன் பாதுகாப்பு திறன் 88 சதவீதமாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசி போடுவதால், ஒமைக்ரானுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஆபத்தும் குறைகிறது.
அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 2 ஆய்வுகளும் 2 டோஸ் போட்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து கணிசமாக குறைவாக இருப்பதை காட்டுகின்றன.
டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரானுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஆபத்து மூன்றில் ஒரு பங்காக உள்ளதாகவும் அந்த ஆய்வரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.