இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு மதிப்பளித்து சீனா பல்துறைகளில் உதவி புரிகிறது. நிபந்தனை விதித்து, உள்ளக விவகாரங்களில் தலையிட்டு உதவி புரியும் கொள்கை சீனாவிற்கு கிடையாது.
சீனாவின் கொள்கையினை முழுமையாக வரவேற்கிறோம். சீனாவின் ‘ஒரு பாதை-ஒரு மண்டலம்’ செயற்திட்டம் சீன-இலங்கை உறவை மேலும் விரிவுப்படுத்தியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட உடற்பயிற்சி நடைபாதை மற்றும் சிறிய படகு பிரிவு ஆகியவற்றை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக சீன நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வோங் யீ (Wang JI) கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் வரலாற்று ரீதியிலான உறவினை பாதுகாப்பது அவசியமானதாகும். வரலாற்று காலத்தில் சீனர்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும், மத போதனைகளுக்காகவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலத்தில் சீனாவுடன் கைச்சாத்திடப்பட்ட அரிசி மற்றும் இறப்பர் ஒப்பந்தத்தை நாட்டு மக்கள் மறக்கவில்லை.
சீன நாட்டின் முன்னாள் பிரதமர் சோ என்லாய் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் இலங்கைக்கு மக்களுக்கு தேவையான உணவிலை அனுப்பி ‘உமக்கு தேவையான உணவினை நீங்களே உற்பத்தி செய்துக் கொள்ளுங்கள்’என்ற செய்தியினையும் அனுப்பி வைத்தார்.
முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள உயிரியல் விவசாய முறைமையினை ஆரம்பித்துள்ளோம். கொவிட் தாக்கத்தினால் அதன் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.உலகிற்கு முன்னுதாரனமாக இருக்க எதிர்பார்த்துள்ளோம்.
2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித சபையில் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைத்த போது சீனா பலம்பொருந்திய நாடு என்ற ரீதியில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டது.
சீனாவின் தீர்மானம் இலங்கைக்கு மாத்திரமல்ல ஆசிய நாடுகளின் சுயாதீனத்தன்மைக்கு பாதுகாப்பாக அமைந்தது.
சீனா இலங்கைக்கு உட்பட ஏனைய நாடுகளின் சுயாதீனத்தன்மைக்கு மதிப்பளித்து உதவி புரிகிறது.நிபந்தனைகளை விதித்து,அரச கட்டமைப்பில் தலையிட்டு உதவி புரியும் கொள்கை சீனாவிற்க கிடையாது. நாம் அவ்வாறான கொள்கையினை வரவேற்கிறோம்.
சீனாவின் ‘ஒருபாதை ஒரு மண்டலம்’ செயற்திட்டம் சீன – இலங்கை உறவை பலப்படுத்தியுள்ளது. சீனா-இலங்கையின் 65 வருடகால இராஜாந்திர உறவு மென்மேலும் பலமடையும்.
துறைமுக நகரம் இலங்கையின் பொருளாதார கேந்திர மையமாக விளங்கும். சீனாவுடனான நல்லுறவினை தொடர்ந்து சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம் என்றார்.