கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் ரூபா பணத்தை வெளிப்படைத்தன்மையுடன், மக்கள் நலன்சார்ந்து செலவிடுமாறு அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கு வரவுசெலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் படி கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் ரூபா பணத்தை வெளிப்படைத்தன்மையுடன், மக்கள் நலன்சார்ந்து செலவிடுமாறு அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
2022ம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டின் படி, கிராமத்துடனான உரையாடல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியின் 95 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும், தலா 3 மில்லியன் படி 285 மில்லியன் ரூபாவும், இணைத்தலைவரின் ஒதுக்கீடாக 100 மில்லியன் ரூபாவும், 40 வட்டாரங்களுக்கும் தலா 4 மில்லியன் படி 160 மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 545 மில்லியன் ரூபா கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், முதலாவது காலாண்டுக்கென கிராமத்துடனான உரையாடல் திட்டத்துக்கு 58 மில்லியனும், வட்டாரங்களுக்கு 32 மில்லியனும், இணைத்தலைவரின் ஒதுக்கீடாக 20 மில்லியனுமாக, மொத்தம் 110 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை வெளிப்படைத்தன்மையுடன், மக்களுடைய நலன்களை நிறைவு செய்யக்கூடிய வகையில் நன்கு திட்டமிட்டுச் செலவிடுமாறு கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
கிராமத்துடனான உரையாடல் திட்டத்தின் படி கிளிநொச்சியின் 95 கிராம சேவையாளர் பிரிவுகளிலும்,இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர்கள் தலைமையில் பொதுமக்களுடனான நேரடிக் கலந்துரையாடல் மூலம் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், சில கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நிதிப்பற்றாக்குறை உள்ள திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து இணைத்தலைவரின் நிதியொதுக்கீடு பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியையும் வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செலவிடுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.