உலக நாடுகள் முழுவதும் தனது மூன்றாவது அலையின் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது தனது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
தற்போது மக்களிடையே அதிகமாக எழும் கேள்வி என்னவெனில், கொரோனா மூன்றாவது அலை எப்பொழுது முடிவுக்கு வரும் என்பதே…
மக்களின் இந்த கேள்விக்கு, ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனீந்திர அகர்வால் பதில் அளித்துள்ளார். அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கெரோனா வைரஸின் 3வது அலை படிப்படியாக குறையும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15ம் தேதி முதல் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொடும் எனக் கூறியுள்ள அவர், டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற பெரிய நகரங்களில் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார்.
டெல்லியைப் பொறுத்தவரை தற்போது ஒரு நாளைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 22,000 ஆக உள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் 40 ஆயிரம் வரை எட்ட வாய்ப்புள்ளதாக ஐஐடி பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.
தங்களின் கணிப்பின்படி பாதிப்புகள் எண்ணிக்கை இருந்தால் மார்ச் மாத நடுப்பகுதிக்குள் 3வது அலை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 40 ஆயிரமாக உள்ளது. ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது மக்களிடையே கடும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.