எரிவாயு தட்டுப்பாட்டை நீக்கும் நோக்கில் தரம் குறைந்த எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை , எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் சந்தித்த போது அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எரிவாயு வெடிப்புச் சம்வங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளார்.
இதன் போது உரையாற்றிய சஜித் பிரேமதாச,
எரிவாயு பிரச்சினையை அரசாங்கம் கேலியாக எடுத்துக் கொண்டுள்ளது. எந்தவிதமான கரிசனையும் கிடையாது. சந்தையில் எரிவாயு தட்டுப்பாட்டை நீக்கிக் கொள்ளும் நோக்கில் , தரம் குறைந்த எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் விற்பனை செய்யுமாறு சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பிலான தகவல்கள் அரசாங்தக்திற்கு உள்ளிருந்து எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. வேண்டுமென்றே தரம் குறைந்த எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
யார் இதற்கு பொறுப்பு சொல்வது, இவ்வாறான ஓர் பாதிப்பு இடம்பெறும் போது , பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச மனிதாபிமான நட்டஈடு வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இந்த அரசாங்கம் இதுவரையில் ஒரு சதமேனும் நட்டஈடு வழங்கவில்லை.
மனிதாபிமானமற்ற அரசாங்கமொன்றே இன்று நாட்டில் ஆட்சி செய்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறுதொகை நட்டஈட்டை நாம் வழங்குகின்றோம், மேலும் அவர்களின் சார்பில் நீதிமன்றம் சென்று அவர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான இலவச சட்ட ஆலேசானைகளும் வழங்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.