“பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மற்றொரு முனையம் (ரேமினல்) அமைக்குமாறும், விமான ஓடுபாதையை விரிவாக்கி அபிவிருத்தி செய்யுமாறும் இலங்கை அரசைக் கோரியுள்ளோம். ஆனால், அவர்களிடமிருந்து இன்னமும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதுவருடனான தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரமேசந்திரன், பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர், “இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குகின்றோம்.
அதில் பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது, புதிதாக முனையம் அமைப்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளோம். ஆனால், இலங்கை அரசிடமிருந்து இன்னமும் சாதகமான பதில் கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.