அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kavirathna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் சிம்மாசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிம்மாசன உரையாற்றிய ஜனாதிபதி மாத்திரமல்ல, நிதியமைச்சர் வெளியிடும் வர்த்தமானி அறிவித்தல்களை கூட நாட்டில் தற்போது ஏற்றுக்கொள்வதில்லை.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டாலும் அதில் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை.
ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை திறந்து சிம்மாசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி, “ எமது அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இலவசமாக பசளையை வழங்கியது” எனக் கூறினார். இது உண்மையா?.
அரசாங்கம் பசளை இறக்குமதியை 2021 ஆம் ஆண்டு மே மாதம் நிறுத்தவில்லை. 2020 ஆம் ஆண்டு மே மாதமே நிறுத்தியது. நாட்டில் டொலர் இல்லாத காரணத்தினால், நாட்டில் பசளை இருக்கவில்லை.
நெல்லுக்கு 50 ரூபாய் என்ற உறுதியான விலையை நிர்ணயித்ததாக ஜனாதிபதி கூறினார். திஸ்ஸமஹாராமவில் ஒரு கிலோ கிராம் பச்சை நெல் 110 ரூபாய். அக்கரைபற்றில் அறுவடை செய்யப்படும் உலர்ந்த நெல் 95 ரூபாய்.
அரசாங்கத்தின் விவசாய கொள்கைகளின் பிரதிபலனே இவை. அத்துடன் அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் இடத்தில் பசில் ராஜபக்ச இருக்கின்றார் எனவும் ரோஹினி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.