நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் குறித்த சி.பி.ஐ. விசாரணை ஏமாற்று வேலை என காங்கிரஸ் கட்சி தாக்கி உள்ளது.
பிரபல இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின.
இதையடுத்து மும்பை போலீசார் நடத்திவந்த இந்த விசாரணை மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன. இருப்பினும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் சச்சின் சாவந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-
திறமையான நடிகர் சுஷாந்த் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன். அவருக்கு ஏற்பட்ட துரதிருஷ்டவசமான மரணம், பீகார் மாநிலத்தில் மலிவான தேர்தல் ஆதாயங்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசால் தவறாக பயன்படுத்தப்பட்டது.
மகா விகாஸ் அகாடி அரசை இழிவுபடுத்துவதற்கும், அதன் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்காகவும் மலிவான அரசியல் செய்யப்பட்டது.
இன்று சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுத்து 534 நாட்கள் ஆகிறது, அதுமட்டும் இன்றி எய்ம்ஸ் மருத்துவமனை இந்த சம்பவம் ஒரு கொலை அல்ல என நிராகரித்து 474 நாட்கள் ஆகிறது.
எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்பான விவகாரங்களை மட்டும் விசாரிப்பதில் அசாதாரண திறமை கொண்ட சி.பி.ஐ. சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடர்பான வழக்கை தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது.
இந்த விசாரணை புகழ்பெற்ற சி.பி.ஐ. விசாரணை நிறுவனத்தின் ஒரு ஏமாற்று நாடகம் மற்றும் அவமானம்.