குடியரசு தினத்தை கௌரவிப்பதில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் நாங்கள் இணைகிறோம் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தினத்தையொட்டி இந்திய மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி,பேசியதாவது:
இந்தியா-அமெரிக்கா கூட்டணி, ஜனநாயக மதிப்பீடுகளை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது. குடியரசு தினத்தை கௌரவிப்பதில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் நாங்கள் இணைகிறோம்.
கடந்த செப்டம்பரில் இந்தியப் பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்குச் வந்தபோது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு வலுவாகவும், நெருக்கமாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜோபிடன் கூறினார். அது முழு உலகிற்கும் பயனளிக்கும் என்றும் பிடன் குறிப்பிட்டார். இவ்வாறு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தமது பேட்டியின் போது தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றுவிக்கப்படுகிறது.