“நான் தான் எதிரணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர். அடுத்த தடவை ராஜபக்சக்களில் ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்கினாலும் நான் தோற்கடித்தே தீருவேன் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க 43ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கி அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்துச் செயற்படுகின்றார் என அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.
இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் ஊடகங்கள் இன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“சம்பிக்க ரணவக்கவின் உண்மையான திட்டம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்தான் எதிரணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்.
கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தலின்போது எதிரணிகளுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் எனக்கான வாக்குகள் சிதறின. இதனால் கோட்டாபய ராஜபக்ச வெற்றிவாகை சூடினார்.
அடுத்த தடவை கோட்டாபய ராஜபக்சவோ அல்லது வேறெந்த ராஜபக்சவோ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் வீழ்த்தியே தீருவேன்.
நாட்டு மக்கள் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கமே உள்ளனர். அவர்கள் நாட்டுக்கான புதிய தலைவரைத் தேடுகின்றனர். அவர்களின் விருப்பத்துக்கிணங்க நான் அடுத்த தடவையும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவேன்.
மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு நூறு வீதம் உண்டு என்றார்.