இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கோவிட்-19 நோயாளர்களில் 90 வீதமானோர் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதை ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 100 வீதமாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ள சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன, அதனை நாட்டின் சுகாதார கட்டமைப்பினால் நிர்வகிக்க முடியாமல் போகும் ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனினும் இதனை நிராகரித்துள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, எந்தவொரு புதிய விகாரமடைந்த வைரஸ்சும் நாட்டிற்குள் பிரவேசிக்குமாயின் அதனை கட்டுப்படுத்தும் திறன், சுகாதார கட்டமைப்புக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கையில் தொற்றுக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கூறியுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்கள், மூன்று கட்ட கோவிட் தடுப்பூசி மருந்தையும் பெற்றிருந்தால், கடுமையான பிரச்சினைகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுவதாகவும் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதுவரை கோவிட் வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், உடனடியாக அதனைப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தடுப்பூசிகள் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாக உப்புல் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அளவுக்கு அதிகமான கோவிட் தொற்று நிலைமைகளை கையாளும் திறன் நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு இல்லை எனவும் நிலைமையின் பாரதூரத்தன்மையை அதிகாரிகளும் மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, சுகாதார அமைப்பால் அதனை நிர்வகிக்க முடியாமல் போகும் பட்சத்தில் கோவிட் தொற்று மரணங்கள் மேலும் அதிகரிக்கும் என உப்புல் ரோஹண எச்சரித்துள்ளார்.
எனினும் எந்தவொரு தொற்று நிலைமையையும் சமாளிக்கும் திறனை நாட்டின் சுகாதார கட்டமைப்பு கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைப்பு எந்த வகையிலும் வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் அண்மைய நாட்களில் கோவிட் தொற்று பரவல் அடைந்துவரும் நிலையில், போதிய படுக்கை வசதிகள் மற்றும் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த சுகாதார அமைச்சர், சில தரப்பினர் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ள போதிலும் எந்வொரு சூழலையும் எதிர்கொள்ளும் திறனை சுகாதார துறை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
சிறந்த மட்டத்தில் சுகாதார கட்டமைப்பை செயற்படுத்த முடியுமான திறன் காணப்படுவதாகவும் எந்தவொரு குறைபாடுகளும் இன்றி பொதுமக்களுக்கான சேவையை வழங்க முடியும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.