மின்சார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மக்கள் பாவனைக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை கடமைப்பட்டிருப்பதாகவும், தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Kamanpila) தெரிவித்துள்ளார்.
தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. தரவுகளைப் பார்த்தால், நவம்பர் மாதம் முதல் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 65% நீர்மின்சாரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது.
ஆனால் இப்போது அது 25% ஆகக் குறைந்துள்ளதாகவும் எனவே மார்ச் தொடக்கத்தில் அல்லது பெப்ரவரி நடுப்பகுதியில் மின்வெட்டு இருக்கும் என்று தான் கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.